மகாராஷ்டிரா: விடாமல் துரத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்று, பாதிப்பும் பல மடங்கு உயர்வு!

Update: 2021-06-22 13:04 GMT

இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. ஆனால் கொரோனா முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை இரண்டாவது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

மகாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா சுகாதாரத் துறையின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும், ஒவுரங்காபாத்தில் 75 பேரும் கரும்பூஞ்சைக்கு உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மக்களுக்கு இதுபற்றி தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் சார்பாக வெளியிடும் அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பதன் வாயிலாக நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News