பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணம் குறித்து தர்மேந்திர பிரதான் பதில்!
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு தான் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. நாம் 80 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்கிறோம்.
இதனால் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை திருப்பிச் செலுத்த காங்கிரஸ் தவறி விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர். இதன் காரணமாக நாம் இப்போது அதன் வட்டி மற்றும் அதன் முதன்மை விலை இரண்டையும் செலுத்த வேண்டி உள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு பெரிய காரணம்." என்று அவர் தெரிவித்தார்.