'தனது வீரர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது என சீனா உணர்ந்திருக்கும்' - பிபின் ராவத்!
கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நம்முடைய இந்திய ராணுவம் தாக்கியதில் 45 சீன ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர். இந்த கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பின்னர் இந்தியா எல்லை பகுதியில் சீன வீரர்கள் குவிக்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனது வீரர்களுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது என சீனா உணர்ந்திருக்கும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிபின் ராவத் அளித்த பேட்டியில் "கடந்த 2020 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், கல்வானில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலுக்கு பிறகு, எல்லை பகுதிகளில் சீன வீரர்கள் குவிக்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து, தங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை என்பதை சீன வீரர்கள் உணர்ந்திருப்பார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயிற்சி பெற்ற சீன வீரர்கள் தான் வந்துள்ளனர். அவர்கள் அங்கு குறுகிய காலமே இருப்பதால், அவர்களுக்கு அந்த பகுதிகளில் போரிட தேவையான பயிற்சிகள் இருந்திருக்காது.
திபெத் மலைப்பிரதேசம் நிறைந்த பகுதி. இங்கு, பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், மலைப்பகுதிகளில் நிறைய பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கு, நமது வீரர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் நாம் செயல்படுவதுடன், தொடர்ந்து அங்கு இருந்துள்ளோம். ஆனால், சீனா அப்படி செய்வது கிடையாது. சீனப்படைகளின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகளை, இந்திய வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்." என்று அவர் கூறினார்.