இந்தியாவின் புதிய தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற நாடாளுமன்ற நிலை குழு அறிவுறுத்தல்!
இந்திய அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை அமல்படுத்தி, அதன் படி கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த சட்ட வீதியில் சமூக ஊடக பயனாளா்களின் குறைகளை தீா்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு போன்றவற்றை குலைக்கும் தகவல்களை முதலில் யார் வெளியிடுகிறார் என்ற தகவலை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த புதிய விதிகளுக்கு இன்று வரை ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொள்ளாத நிலையில், மத்திய அரசாங்கம் ட்விட்டரின் இந்த செயல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மேலும் உத்திரபிரதேசத்தில் முஸ்லிம் நபரை தாக்கும் வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்காததால், அந்நிறுவனத்தின் மீது உத்திரபிரதேச காவல் துறை வழக்குப்பதிவும் செய்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற வேண்டும் என முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலை குழு அறிவுறுத்தியுள்ளது.