'டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்போம்' : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

Update: 2021-07-06 07:31 GMT

நமது பாரத நாட்டில் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பொது மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக செலுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 'கோ-வின்' (CO-WIN) என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த இணையதளம் மூலம் நாம் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். மேலும் நாம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் அதில் உள்ளது. 


கோ-வின் இணையதளத்தை கொரோனா தொடர்பான செயல்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா,உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆர்வம் காட்டி வந்தனர். எனவே கோ-வின் இணையதளத்தின் பயன்பாட்டை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க பாரத பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் நேற்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கோ-வின் உலகளாவிய மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கோ-வின் இணையதளத்தின் மீது ஆர்வம் உள்ள நாடுகளுக்கு அதன் பயன்பாட்டை  வழங்கினார், மேலும் கோவின் இணயதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து அவர் உரையாற்றினார்.


அவரை தொடர்ந்து இந்த கோவின் உலகளாவிய மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்  "கோ-வின் இணையதளம் இந்தியாவின் டிஜிட்டல் முன்னெடுப்பின் மணிமகுடம். இது இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அதனை வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்த இந்த கோ-வின் இணையதளம் உதவியது.


தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களின் பதிவு, சான்றிதழ் என அனைத்தையும் திறம்பட ஒருங்கிணைக்க கோ-வின் இணையதளம் உதவியுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் பொது மக்கள் தனது தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இந்த இணையதளத்தில் பதிவு செய்தனர் ,இதன் காரணமாக  தடுப்பூசியின் தேவையை மிகவும் நுட்பமாக அறிந்துகொள்ள முடிந்தது.

இந்தியா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 35 கோடி நபர்களுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி பெற தகுதியுடைய ஒட்டுமொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்போம்." என்று ஹர்ஷ வரதன் பேசியுள்ளார்.

Tags:    

Similar News