'தெளிவான பதில் இல்லையென்றால் சிக்கலை சந்திப்பீர்கள்' : ட்விட்டருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிப்படி , சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த நபர்களை மட்டுமே குறைதீர்வு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த புதிய சட்டத்திற்கு முதலில் ட்விட்டர் நிறுவனம் இணங்க மறுத்தது. பின்னர் இந்த சட்டத்தை அமல்படுத்த சிறிது நேரம் கால அவகாசம் கேட்டது. மத்திய அரசு கால அவகாசம் அளித்தும், இந்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்காததால் ட்விட்டரின் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியது. இதனால் அதன் தளத்தில் வெளியாகும் சட்டவிரோத கருத்துக்கள், படங்கள், வீடியோக்களுக்கு ட்விட்டர் நிறுவனமே பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.
இவ்வாறு இருக்கையில் கடந்த ஜூன் மாதம் ட்விட்டரின் இடைக்கால குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திர சதுர் பதவி விலகினார். அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்திய குறைவுதீர்வு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய விதிகளை பின்பற்றவில்லை என ட்விட்டருக்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் தொடர்ந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ட்விட்டர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா, இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் 2 வாரங்கள் அதற்கு தேவைப்படும் என்று கூறினார்.
இந்த பதிலை கேட்ட நீதிபதி ரேகா பாலி "உங்கள் பணிகள் முடிய எவ்வளவு நாள் ஆகும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்திய நாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என ட்விட்டர் கருதினால், நான் அதை அனுமதிக்க மாட்டேன். ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து முறையான காலக்கெடு தேவை. தெளிவான பதிலுடன் வருவது நல்லது, இல்லையென்றால் சிக்கலை சந்திப்பீர்கள்" என்று நீதிபதி கூறினார்.