காஷ்மீரில் தேர்தல் நடத்த தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!

Update: 2021-07-07 01:15 GMT

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370) கடந்த 2019 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நீக்கி லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சில தினங்களுக்கு முன்பாக காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள்  'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர். காஷ்மீரில் நடந்த ஆலோசனை கூட்டம் குறித்து அமித்ஷா கூறுகையில் "ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தங்கள் உறுதிப்பாட்டை அனைவரும் வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீரில் அனைத்து கட்டங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும் பாராளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி தொகுதி வரையறையும், அமைதியான முறையிலான தேர்தலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது போன்ற அம்சங்களை நிறைவேற்ற செயல்படுவோம்." என்று தெரிவித்தார்.


அமித்ஷா கூறியதை போல் தற்போது ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்த ஏதுவாக தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழு இன்று தனது பணியை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அவர்கள் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News