ஈரான் அமைச்சருடன் கலந்துரையாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Update: 2021-07-08 12:59 GMT

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். S. ஜெய்சங்கர் அவர்கள் தற்பொழுது சுற்றுப்பயணமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்தியாவுடன் பல நாடுகளுக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த சுற்றுப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அரசு முறைப்பயணமாக நாளை ரஷ்யா செல்ல உள்ளார். அதற்கு முன்பாக இன்று அவர் ஈரான் சென்றுள்ளார். அங்கு அவரை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வரவேற்றார். அதன் பின்னர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ஈரான் மற்றும் இந்தியா உடனான வலுவான தொடர்பிற்கு முக்கிய அங்கம் வகிக்கும் பல பேச்சுவார்த்தைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இன்றைய சந்திப்பை தொடர்ந்து நாளை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்ப யணத்தின் போது இந்தியா, ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News