கேரளா: கொரோனா வைரஸ்க்கு மத்தியில் புதிதாக உருவெடுக்கும் ஜிகா வைரஸ்!

Update: 2021-07-09 12:45 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் தான் இருந்து வருகின்றது என்று மத்திய அரசு தன்னுடைய குழுக்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் மட்டும் நாள்தோறும் சராசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டியே வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 


கேரளாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அங்கு ஜிகா வைரஸும் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. பாறசாலை என்னும் பகுதியில் 24 வயது பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்களின் மூலமாகவே ஜிகா வைரஸும் பரவுகிறது. 


பொதுவாக இத்தகைய வைரஸ் மழைக்காலங்களில் நோய்களை உண்டாக்கி பரவக்கூடியதாகும். எனவே, தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதன் மூலமாக இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பிணிகளுக்கு இந்த ஜிகா வைரஸ் பாதித்தால், அவர்களின் சிசுக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் மூலம் இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News