சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாறுதலில் புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் புதிதாக பதவி ஏற்கவுள்ள அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் ரயில்வே அமைச்சராகவும், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு தகவல்தொடர்புத் துறை அமைச்சராகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஸ்வினி வைஷ்னவ் பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களில், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை இரண்டு ஷிப்ட்களில் பணிக்கு வருமாறு உத்தரவிட்டார்.
இதில் முதல் ஷிப்ட் காலை 7:00 மணிக்குத் தொடங்கி மாலை 4:00 மணி வரையிலும், மேலும் இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12:00 மணி வரையிலும் பணி புரியுமாறு அவர் தெரிவித்தார். அது மட்டுமின்றி அதிகாரிகள் வேலை செய்யும் நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தி அதன் அடிப்படையில் பணி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில் "ரயில்வே துறையை சாமானிய மக்கள், விவசாயிகள், ஏழைகள் அனைவரும் பயன்பெறுமாறு மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார். அவரின் நோக்கத்தின் படி சிறப்பாக செயல்படுவேன்" என்று அவர் தெரிவித்தார்.