மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி சமூக ஊடக நிறுவனங்கள் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சமூக ஊடகங்கள் இந்த புதிய விதியை பின்பற்றி, அதன் அடிப்படையில் செயல்பட்டு வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும் இன்று வரை இந்தியா கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிக்கு இணங்கி செயல்பட வில்லை.
இந்த புதிய விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என தெரிவித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி விசாரித்து வருகிறார்.இந்த மனு குறித்து நடைபெற்ற விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, குறைதீர் அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்பாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிவரும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி குறைதீர் அதிகாரியை நியமிக்க எட்டு வாரம் அவகாசம் தேவை என்று தெரிவித்தது.
இந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 'மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகள் மீறப்பட்டால் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். மேலும் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அசல் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது' என்று நீதிபதி தெரிவித்தார்.