மேகதாது அணை குறித்து மத்திய ஜலசக்தி அமைச்சருடன் கர்நாடக முதல்வர் கலந்துரையாடல்!

Update: 2021-07-13 11:01 GMT

கர்நாடகா மாநிலம் மேகதாதவில் தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கூடாது என மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். சென்னையில் நேற்று (ஜூலை 12) நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் மேகதாது விவகாரம் தொடர்பாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  


இவ்வாறு இருக்கையில், கர்நாடகா மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காகவும் மற்றும் மின்சார உற்பத்திக்காகவும் மேகதாதுவில் தடுப்பணை கட்டப்படுகிறது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே போல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது அந்த மாநிலத்தில் உரிமை, இது தொடர்பாக தமிழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இவ்வாறு இருக்கையில் , ஜல ஜீவன் குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கர்நாடகா மாநிலம் பெங்களூரு வந்தார். கர்நாடகா தலைமை செயலகமான விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சிறு நீர்பாசனத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு மத்திய அமைச்சரை சந்தித்து பேசினர்.


இந்த சந்திப்பின் போது மத்திய ஜலசக்தி துறை அமைச்சருடன் கர்நாடகாவில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளபட்டது. மேலும் மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பான விஷயங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது . கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News