தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில், ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் கலந்து கொண்டு, இந்தியாவின் பார்வை குறித்து பேசினார். மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் குறித்து அந்த நாடு விரைந்து சுமூகமான தீர்வை கண்டறிந்து, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு பின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் சீனா மற்றும் இந்தியா உடன் ஏற்படும் எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து அமைச்சர் ஜெய்சஙகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "துஷான்பேயில், ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். சீனாவுடன் மேற்கு பகுதியில் நீடிக்கும் எல்லை பிரச்சனை குறித்து அவரிடம் விவாதிக்கபட்டது.
எல்லை பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டேன். எல்லையில் முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும் நிலவினால் தான் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். மேலும் எல்லை பிரச்னைக்கு ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்பு கொண்டு உள்ளன." என்று அவர் பதிவிட்டுள்ளார்.