வேகமெடுக்கும் கொரோனா.. வரும் நாட்களில் எச்சரிக்கை தேவை : மத்திய அரசின் அறிவுரை!
இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸின் 2வது அலை குறைய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது அலை இந்தியாவில் தொடங்கிவிட்டன என்று சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றவாறு தற்பொழுதும் தொற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமுடன் கையாள வேண்டிய ஒரு தருணமாக இது இருக்கிறது. ஏனெனில் முன்பு ஏற்பட்ட அலையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இதை எடுத்துக்கொள்ளலாம். அரசு தரப்பில் வெளியிடப்படும் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் மக்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்தியாவில் அடுத்து வரும் 100 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும் என்று மத்திய அரசு தற்போது எச்சரித்துள்ளது. எனவே இதுகுறித்து மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கும் நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் V.K.பால் கூறுகையில், "கொரோனா 3வது அலையை அலட்சியமாக கருத வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் 3வது அலை மோசமான நிலையில் இருந்து படு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. எனவே அனைத்து மக்களும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்தால் போன்ற செயல்கள் மூலமாக 3வது அலை நம்மால் தவிர்க்க முடியும்" என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதுபோன்ற மக்களின் பொறுப்பற்ற செயல்களால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாவட்டங்கள் வாரியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 73 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 பேருக்கும் குறைவாக உள்ளது. ஆனால், 47 மாவட்டங்களில் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால், அம்மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தற்பொழுது வலியுறுத்தியுள்ளது. கடைசியில், 3வது அலையை தவிர்க்க அடுத்து வரும் 100 நாட்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.