துப்புரவு பணியாளர் பதவிலிருந்து துணை கலெக்டராக ஆக போகும் சாதனை பெண்!

Update: 2021-07-19 12:43 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷா கந்தாரா என்ற பெண்தான் தற்பொழுது அனைவர் மத்தியிலும் சாதனை பெண்ணாக வலம் வருகிறார். காரணம் இவருடைய கடின உழைப்பை தான். பட்டதாரி பெண்ணான ஆஷா ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக ஏற்கனவே பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கலெக்டராக வேண்டும் என்பதுதான் நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் தன்னுடைய திருமணத்தின் காரணமாகவும், குடும்பம் சூழ்நிலை காரணமாகவும் இவர் தன்னுடைய கனவை சற்று தள்ளி வைத்திருக்கிறார். மேலும் குடும்ப பிரச்சினையின் காரணமாக இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையில் விவாகரத்து நடந்தது. 


இதன் காரணமாக இவருடைய பிள்ளைகள் இருவரையும் இவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார். இதனால் இவர் துப்புரவு பணியில் பணியாற்றிக் கொண்டே தன்னுடைய கலெக்டராக வேண்டும் என்ற கனவை முன்னெடுத்து இருக்கிறார்.

ஆனால் இவருடைய வயது வரம்பு காரணமாக UPSC தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சிவில் சர்வீஸ் (RAS) தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே இந்த தேர்வில் இவர் வெற்றி பெற்று இரண்டாம் கட்டத்திற்கு சென்று உள்ளார்.


அடுத்த கட்ட தேர்வையும் முழு முயற்சியுடன் எழுதி முடித்து இருந்தார். ஆனால் தற்போது உள்ள கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்வுகளின் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஆஷா இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக இவர் தூய்மைப் பணியாளர் பதவியில் இருந்து தற்பொழுது துணை கலெக்டராக இவருடைய முயற்சியினால் உயர்ந்திருக்கிறார். இதுபற்றி ஆஷா கூறுகையில், "கல்வியில் பிறந்து வழங்குவதன் மூலம், எந்த ஒரு பெண்ணும் வாழ்க்கையில் தனது இலக்கை அடைய முடியும்" என்று கூறியுள்ளார். 

Similar News