மராட்டிய நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக மிகவும் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் கனமழை காரணமாக அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் பலர் படு காயம் அடைந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30 க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அது மட்டுமின்றி, இந்த நிலச்சரிவு காரணமாக பலர் தங்களுடைய வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு குறித்து பாரத பிரதமர் மோடி "மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிசில் சிக்கி பலர் தங்கள் உயிரை இழந்துள்ளதை கண்டு நான் மிகவும் வேதனை அடைகிறேன். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.
ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவராண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.பலத்த மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது." என்று பிரதமர் தெரிவித்தார்.