உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் மேலும் ஒரு வரலாற்று நகரம் : பிரதமர் மகிழ்ச்சி!

Update: 2021-07-28 11:01 GMT

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இதனை அறிந்த பாரத பிரதமர் மோடி, தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவரையும் இந்த கோயிலுக்கு சென்று வருமாறு பிரதமர் மோடி கேட்டு கொண்டார். இந்த நிலையில் தற்போது, உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ சேர்த்துள்ளது.


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கி வருவது இந்த தோலாவீரா நகரம். தற்போது இந்த தோலாவீரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளதை அடுத்து, உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நமது இந்திய நாட்டின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளன.  


இது குறித்து பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "யுனெஸ்கோ வின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தில் உள்ள தோலாவீரா நகரம் இடம்பெற்றதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தோலாவீரா நகரம் கடந்த காலத்தில் முக்கியமான நகர்ப்புற பகுதியாக விளங்கியது. அது மட்டுமின்றி, இந்த நகரம் நமது கடந்த கால வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள மக்கள் இந்த நகரத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். 


மேலும் நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது இந்த தோலாவீரா நகரத்தின் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. எங்கள் அணி இந்த தோலாவீரா நகரை சுற்றுலா தளமாக மாற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பல வேலைகள் செய்தோம்." என்று பாரத பிரதமர் பதிவிட்டிருந்தார். 

Tags:    

Similar News