நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு!
சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறை பிரபலங்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
அதன்படி, இந்திய திரை துறையில் இருந்து பிரபல நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கான், பிரேம் சோப்ரா, தமன்னா, மவுனி ராய், ஜூஹி சாவ்லா, சில்பா செட்டி, மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் துறையில் இருந்து ஹர்பஜன் சிங், ஏ.பி.டெவிலியர்ஸ், மேத்திவ் ஹைடன், விவியன் ரிச்சர்ட்ஸ், இசை துறையில் இருந்து பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல், தில்ஜித் தோஷந்த், மலுமா உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களுடைய மனமார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "உலக பொருளாதார கூட்டமைப்பின் தகவலின்படி, உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏதோ ஒரு விதமான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் சற்று நல்ல நிலையில் இருக்கும் மக்கள் கூட ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உங்களுடைய வயிறு நிரம்பியுள்ளதால், அதை நீங்கள் உணரவில்லை. ஆனால், உங்களுடைய உடல் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிப்புக்கு உள்ளாகிறது. நமது மண்ணே அழிந்து வருவதால், நாம் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சத்துக்கள் இல்லாமல் போகிறது. மண்ணை வளமாக வைத்து கொள்ளாவிட்டால், நாமும், நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.
எனவே, இது மண்ணை காப்பதற்கான நேரம். மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான, நிலையான பூமியை உருவாக்கும் இம்முயற்சியில் என்னுடன் இணையுங்கள்" என தெரிவித்துள்ளார்.
சத்குருவுடன் கலந்துரையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "மண் காப்போம் இயக்கத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு சத்குரு பைக்கில் பயணித்து வருகிறார். இந்த மாபெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ள அவருக்கு எனது பாராட்டுக்கள். வாருங்கள், நாம் அனைவரும் இவ்வியக்கத்தில் பங்கெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.