விண்வெளியில் பிரகாசிக்கும் இந்தியாவின் எதிர்காலம்.. மோடி அரசினால் தொடரும் மாற்றங்கள்..
இஸ்ரோவின் நம்பகமான, துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான PSLV மூலம் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட விண்கலமான ஆதித்யா எல் 1, ஸ்ரீஹரிகோட்டா-வில் இருந்து செலுத்தப்பட்டது இந்தியாவுக்கு "பிரகாசிக்கும் தருணம்" என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பிஎஸ்எல்வி-சி 57 செலுத்து வாகனம், ஆதித்யா எல் 1-ஐ வெளியேற்றிய உடன் கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடையே உரையாற்றிய அமைச்சர், முழு உலகமும் இதை ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையில், இது உண்மையில் இந்தியா பிரகாசிக்கும் சூரிய ஒளி தருணம் என்று கூறினார். இந்திய விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் பல ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்ததன் மூலமும், வானம் எல்லை அல்ல என்பதைக் கூறி ஊக்கமளித்து இதைச் சாத்தியமாக்கியதற்காகவும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட விண்கலமான ஆதித்யா -எல் 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ-வுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட இயக்கமான ஆதித்யா-எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பாராட்டியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தப் பணி சூரிய குடும்பம் குறித்த நமது புரிதலை பெரிதும் ஆழப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "பாரதத்தின் முதல் சூரிய ஆய்வு இயக்கமான, ஆதித்யா-எல் 1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது நமது விண்வெளி பயணத்தில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக அமைந்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் பாராட்டுகிறேன். இந்த முக்கியமான சாதனை, நிச்சயமாக சூரிய குடும்பத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்" இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News