குஜராத்தின் பிபர்ஜாய் புயல்.. 144 தடை உத்தரவு.. சக்தி வாய்ந்த புயலாக மாறுமா?
பிபர்ஜாய் புயலால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை.
பிபர்ஜாய் புயலால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆய்வு மேற்கொண்டார். இந்தப் புயல் நாளை குஜராத் கடலோரப் பகுதிகளில் அதிதீவிரப் புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய சோனோவால், அண்மைக் காலங்களில் இந்தியாவை தாக்கும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கு நாம் முழுஅளவில் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பொருட்களின் இழப்புகளை தவிர்க்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருவதாகவும், புயலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த முகாம்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவசர கால உதவி, மருத்துவ உதவி, ஊட்டசத்து மிக்க உணவு ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் பெரிய கப்பல்களில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். புயல் கரையைக் கடக்கும் வரை உயிர் மற்றும் உடைமையை பாதுகாக்கும் வகையில், ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து அமைப்புகளையும் சர்பானந்த சோனாவால் கேட்டுக் கொண்டார்.