விவசாயிகளுக்கு 15ஆவது தவணை 18,000 கோடி.. விடுக்க இருக்கிறார் பிரதமர் மோடி..
பிரதமரின் விவசாயிகள் நலத் திட்டத்தின் கீழ் சுமார் 18,000 கோடி ரூபாய் 15 வது தவணைத் தொகையை பிரதமர் விடுவிக்கிறார். ஜார்க்கண்டில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி 14 மற்றும் 15 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 15ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்கு பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்கு வருகை தரும் முதல் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். குந்தியில் காலை 11:30 மணியளவில் மூன்றாவது பழங்குடியினர் கௌரவ தினம், 2023 கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை' மற்றும் பிரதமரின், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் விவசாயிகள் நலத் திட்டத்தின் 15-வது தவணை தொகையை அவர் விடுவிக்கிறார். மேலும் ஜார்க்கண்டில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை திட்டங்களின் பயன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கியத் திட்டங்களின் முழுமையை அடைவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். திட்டங்கள் முழுமை பெறுதல் என்ற இந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக, பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். சுகாதார வசதிகள், அத்தியாவசிய நிதி சேவைகள், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து, நம்பகமான சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்ற நலத்திட்டங்களின் நன்மைகளை மக்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த யாத்திரை கவனம் செலுத்தும். யாத்திரையின் போது உறுதிப் படுத்தப்பட்ட விவரங்கள் மூலம் சாத்தியமான பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
Input & Image courtesy:News