வாரணாசியில் ₹1,500 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Update: 2021-07-16 02:39 GMT

பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தனது தொகுதியான வாரணாசியில் ₹1,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில்  உத்தர பிரதேசத்தின் ஆளுநர் அனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை வரவேற்றனர்.


பின்னர், நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.744 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார், மேலும் ₹839 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.


வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு, கோடவுலியாவில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்தம், கங்கை நதியில் நவீன படகுகள் மூலம் சுற்றி பார்க்கும் திட்டம் , வாரணாசி- காசிப்பூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வீட்டு தோட்ட வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 


இதனை அடுத்து பிரதமர் மோடி  பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் துவக்கி வைத்த, 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவை நேரில் சென்று பார்வை இட்டு அங்குள்ள மருத்துவர்களிடம் இந்த மருத்துவ பிரிவு குறித்து கேட்டு அறிந்தார். 


பின்னர் இந்த நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் " இந்தியாவில் கொரோனா  வைரசை எதிர்த்து உத்தரபிரதேச அரசு மிகவும் வலுவுடன் சிறப்பாகவும் செயல்பட்டது. வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டுக்குரியவை. அதே போல் உத்தரபிரதேச மாநிலம் தான் இந்தியாவில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலம். கொரோனாவிற்கு எதிர்த்து போராடியவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். அவர் அடிக்கடி இங்கு வந்து, நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து வருவதை மக்கள் பார்த்து வருகின்றனர். அவர் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார். மேலும் உத்தர பிரதேசத்தில் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் பயங்கரவாதம் முழுமையாக கட்டுக்குள் உள்ளது. இதனால் குற்றவாளிகள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் முன்பு இந்த சட்டத்தை கண்டு பயந்து விடுகின்றனர்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News