குறைந்த காலகட்டத்தில் அதிக தடுப்பூசி-இந்தியாவுக்கு 2வது இடம்!

Update: 2021-05-27 01:30 GMT

இந்தியா முழுவதும் கடந்த 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் குறைந்த காலகட்டத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து 130 நாட்களில் 20,06,62,456 (20 கோடி) டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4,35,12,863 (4.35 கோடி) பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 42 சதவீதம் பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். 45-60 வயதுக்கு உட்பட்ட 34 சதவீதம் பொதுமக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியா 130 நாட்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 168 நாள்களில் 5.1 கோடி டோஸ் தடுப்பூசி போடபட்டுள்ளதும், பிரேசிலில் 128 நாள்களில் 5.9 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

Similar News