'உலகின் முதல் 3 கடற்படைகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்' : ராஜ்நாத் சிங் நம்பிக்கை!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு முற்றிலும் இந்திய தயாரிப்பிலேயே உருவாகி வரும் முதல் அதிநவீன" ஐஎன்எஸ் விக்ராந்த்" விமானம் தாங்கி போர்க்கப்பலின் கட்டுமான பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
அப்போது ராஜ்நாத் சிங் உடன், கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், கடற்படை தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ஏ.கே.சாவ்லா ஆகியோர் உடன் சென்றனர். மேலும் கப்பலில் நேவிகேஷன், தகவல் தொடர்பு உள்பட இதர கருவிகளை பொருத்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விளக்கப்பட்டது. இந்த 'ஐஎன்எஸ் விக்ராந்த்' என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையில் 2022 ஆம் ஆண்டு மத்தியில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.
போர்க்கப்பலின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின்னர் கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் "இந்த போர் கப்பலில் 75 சதவீத பொருட்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானவை. மேலும் கோவிட்- 19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய கடற்படையின் பணி பாராட்டத்தக்கது. டவ்தே மற்றும் யாஸ் புயல்களின் போது கடற்படை மேற்கொண்ட தேடுல் மற்றும் மீட்பு பணிகளும் பாராட்டத்தக்கவை. உலகின் முதல் 3 கடற்படைகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என நான் நம்புகிறேன்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.