'கொரோனா நோயால் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி வேளாண் கடன் தள்ளுபடி' - கர்நாடகா அரசு அதிரடி!
இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் தவிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா நோயின் பாதிப்பால் விவாசாயிகள் பலர் உயிர் இழந்துள்ளனர், இதனால் அவர்களது குடும்பம் சரியான வருமானமின்றி மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கர்நாடகா அரசு கொரோனா நோயால் உயிரிழந்த விவாசியாகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் கூறுகையில் "குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ கர்நாடகாவில் BPL அட்டைதாரர் (வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை) குடும்பத்தில் தொற்றுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளான் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 2020 - 21 ஆம் நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது." என்று அவர் தெரிவித்தார்.