"டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 96 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்" - W.H.O எச்சரிக்கை!
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் பல பாதிப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாம் அலை முடிவடைவதற்கு முன்னரே டெல்டா வகை கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் உள்ளன, என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 18.29 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 39.62 லட்சம் நபர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். எனினும், 16.75 கோடி பேர் இந்த கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பது மிகவும் ஆறுதலாக உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனாவின் உருமாறிய வகையால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த உருமாறிய கொரோனா வகைகளை ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு இருக்கையில் , 172 நாடுகளில் ஆல்பா வகை கொரோனா தொற்றாலும், 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா தொற்றாலும், 72 நாடுகளில் காமா வகை கொரோனா தொற்றாலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, 96 நாடுகளில் உள்ள மக்கள் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட நாடுகள் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.