குஜராத்தில் G20 கூட்டம்.. இந்திய மருத்துவர்களின் மகத்தான செயலை பாராட்டிய பிரதமர்..
"இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக, மதிப்பிற்குரிய உலகளாவிய சுகாதாரத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களை இந்தியாவிற்கு, குறிப்பாக துடிப்புமிக்க மாநிலமான குஜராத்துக்கு இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். இதில், 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவர்கள், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவின் சுகாதார வல்லுநர்கள், ஆற்றல்மிக்க சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுடன் நான் இணைந்துள்ளேன்" என்று குஜராத்தின் காந்திநகரில் நேற்று தொடங்கிய G20 இந்தியா சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமான உரையில் கூறினார்.
மகாத்மா காந்தியின் தத்துவத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், ஆரோக்கியத்திற்கும், இணக்கமான வாழ்க்கைக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை எடுத்துரைத்தார். இந்த உணர்வை எதிரொலிக்கும் வகையில், பண்டைய சமஸ்கிருத பழமொழி ஒன்றை பிரதமர் மேற்கோள் காட்டினார். ஆரோக்கியம் தான் அதிகபட்ச செல்வம், நல்ல ஆரோக்கியத்துடன் எல்லாப் பணிகளையும் செய்து முடிக்க முடியும் என்பது அதன் பொருள். உலகளாவிய தொற்றுநோயை அடுத்து, உலகளாவிய முடிவுகளை மேற்கொள்வதில் சுகாதாரத்தை மையமாக வைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
100-க்கும் அதிகமான நாடுகளுக்கு 300 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வழங்கிய தடுப்பூசி தோழமை முன்முயற்சியின் மூலம் ஏற்பட்ட சர்வதேச ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். உலகம் இன்று ஒன்றோடொன்று ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதால், எதிர்கால சுகாதார அவசரநிலைகளை ஒன்றிணைந்து எதிர்நோக்கவும், தயார்படுத்தவும், தீர்வுகாணவும் உலகளாவிய சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் கூறினார். அனைவரும் மகிழ்ச்சியாகவும், நோயற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
Input & Image courtesy: News