20% செலவுகளைக் குறையுங்கள் - சிக்கனத்தைக் கடைபிடிக்க அலுவலகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

Update: 2021-06-14 03:32 GMT

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு அதை கட்டுப்படுத்துவதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ‌ காரணமாக மத்திய அரசிற்க்கு செலவு அதிகரித்துள்ளதால் தவிர்க்கக்கூடிய செலவீனங்களில் 20 சதவீதத்தை குறைக்க வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கவும் தடுப்பூசி வழங்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு விலை கொடுத்து வாங்கி அதை மாநில அரசிற்கு இலவசமாக வழங்கி வருகிறது.மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு தீபாவளி வரை கூடுதலாக ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 1.45 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட உள்ளது.

இதனால் கடந்த ஆண்டு சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடித்தது போல இந்த ஆண்டும் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, நிபுணர்கள் நியமனம், விழாக்கள், வெளிநாடுகளில் இருந்து அச்சு காகிதங்கள் வாங்குவது போன்ற முக்கியத்துவம் அதிகம் இல்லாத செலவுகளை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் குறைக்க வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செலவு குறைப்பு நடவடிக்கையில் 'ஓவர்டைம்' எனப்படும் கூடுதல் நேர பணிக்கான படிகள், வெளிநாட்டு பயணங்கள், அலுவலக செலவீனங்கள் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்றும் விளம்பரம், பராமரிப்பு செலவு, இதர அலுவல் ரீதியான செலவுகள் போன்றவற்றில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News