2022 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3 விண்கலம்: மத்திய அமைச்சர் தகவல்.!
The launch of chandrayan 3
இந்தியாவில் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவிய கால கட்டங்களில் பெரும்பாலான அரசு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலுமாக தடைபட்டது. ஊரடங்கும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறலாம். அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட, சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது தொடர்பான மிஷின் தற்போது மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 2022-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில் " சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்கும் பணி நடைபெற்று வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தை நினைவாக்க, கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான பணிகள் வைரஸ் பெருந்தொற்றால் பாதிப்படைந்தது. எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் ஊரடங்கின் போதும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பணிகள் மீண்டும் நடைபெறத் தொடங்கிவிட்டன. சந்திராயன் 3 மிஷன் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. மேலும் பணிகள் இயல்பாக இனி மேற்கொள்ளப்படும் என்று அனுமானத்தில், 2022-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும்" என்று அவர் கூறினார்.