3 நாட்களில் நைட்ரஜன் உற்பத்தி கருவிகளை ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகளாக மாற்றி சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்கள்!

Update: 2021-04-30 01:15 GMT

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு மும்பை ஐஐடி புதுமையான உள்நாட்டு தீர்வை கண்டுள்ளது.

வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட இந்த திட்டம், எளிமையான தொழில்நுட்ப உபகரணத்தை சார்ந்துள்ளது.  மும்பை ஐஐடியில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள், நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளன.

ஆக்ஸிஜன் உற்பத்தியை 3.5 ஏடிஎம் அளவில், 93 சதவீதம் முதல் 96 சதவீத தூய்மையுடன் உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆக்ஸிஜனை கொவிட் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகிக்க பயன்படுத்த முடியும்.

தற்போதுள்ள நைட்ரஜன் ஆலையில் மாற்றம் செய்து, அதில் உள்ள மூலக்கூறு சல்லடைகளை கார்பனிலிருந்து ஜியோலைட்டுக்கு மாற்றுவதன் மூலம் இதை செய்ய முடியும்'' என இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மிலிந் அட்ரே கூறியுள்ளார்.

இது போன்ற நைட்ரஜன் ஆலைகள், காற்றிலிருந்து மூலப்பொருட்களை எடுக்கின்றன, இந்த ஆலைகள் நாடு முழுவதும் பல தொழிற்சாலைகளில் உள்ளன.

ஆகையால், ஒவ்வொரு நைட்ரஜன் ஆலையையும், ஆக்ஸிஜன் ஆலையாக மாற்றி, தற்போதைய மருத்துவ அவசரநிலைக்கு உதவ முடியும்'' என அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனை திட்டம், மும்பை ஐஐடி மற்றும் பிஎஸ்ஏ நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகளை தயாரிக்கும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் மும்பை ஸ்பான்டெக் இன்ஜினியர்ஸ் இடையேயான கூட்டு முயற்சி திட்டமாகும்.

மும்பை ஐஐடியின் பரிசோதனைக் கூடத்தில் உள்ள ரெப்ரிஜிரேஷன் மற்றும் கிரையோஜெனிக்ஸ் பரிசோதனைக் கூடத்தில் உள்ள பிஎஸ்ஏ நைட்ரஜன் ஆலை, இந்த மாற்றத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொள்ள மும்பை ஐஐடி, டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும் ஸ்பான் டெக் இன்ஜினியர்ஸ் நிறுவனங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசர அடிப்படையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஆய்வுக்கு தேவையான உபகரணங்களை மும்பை ஐஐடி பரிசோனைக்கூடத்தில் உள்ள நைட்ரஜன் ஆலையில் ஸ்பான்டெக் இன்ஜினியர்ஸ் நிறுவியுள்ளது. இந்த ஆய்வுக்கான ஏற்பாடுகள், 3 நாட்களில் உருவாக்கப்பட்டது.

Similar News