8000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்தப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய அனல் மின் கழகத்தின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகு, மனோகராபாத் மற்றும் சித்திபேட்டை இணைக்கும் புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்கள் இதில் அடங்கும். தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம். பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய திட்டங்களுக்காக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியும் மின்சார உற்பத்திக்கான அதன் தற்சார்பு திறனைப் பொறுத்தது. ஏனெனில் இது ஒரே நேரத்தில் வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார். பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகை அர்ப் பணிப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், "சீரான மின்சார விநியோகம் ஒரு மாநிலத்தில் தொழில்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டார். இரண்டாவது அலகும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அது முடிந்ததும் மின் நிலையத்தின் நிறுவு திறன் 4,000 மெகாவாட்டாக உயரும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து என்.டி.பி.சி மின் நிலையங்களில் தெலங்கானா சூப்பர் அனல் மின் நிலையம் மிகவும் நவீன மின் நிலையம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி தெலங்கானா மக்களுக்குச் செல்லும்" என்று கூறிய பிரதமர், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை குறிப்பிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், இன்று அதனைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். இது எங்கள் அரசின் புதிய பணிக் கலாச்சாரம் என்று அவர் மேலும் கூறினார்.
Input & Image courtesy: News