நடிகை விஜயசாந்தியை அடுத்து பாஜகவில் இணைந்த மற்றொரு தெலங்கானா முக்கியஸ்தர்.!

நடிகை விஜயசாந்தியை அடுத்து பாஜகவில் இணைந்த மற்றொரு தெலங்கானா முக்கியஸ்தர்.!

Update: 2020-12-08 09:37 GMT

பாரதீய  ஜனதா கட்சி எப்போது மில்லாத வகையில் கடந்த ஒரு வருடமாக தெலங்கானா மாநிலத்தில் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. சென்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் நான்கு இடங்களை பிடித்தது. மேலும் பல தொகுதிகளில் காங்கிரசையும், தெலுங்கு தேசத்தையும் விரட்டியடித்துவிட்டு 2 ஆம் இடத்தை பிடித்தது. 

அது மட்டுமல்லாமல் ஹைதராபாத் தொகுதியில் வழக்கமாக வெற்றியை குவிக்கும் ஒவைசியின் வெற்றியை அலைகழித்தது. 

நூலிழையில் அவர் வெற்றியடைந்தார். ஆளும் டி.ஆர்.எஸ்.கட்சி, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை ஓடவிட்டு விரட்டியடித்து 2 ஆம் இடத்தை முஸ்லிம்கள் பெரும்பான்மையுள்ள அந்த தொகுதியில் பிடித்தது. அடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாக நடந்த டுப்பாக் தொகுதி  இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து பா. ஜ.க, வெற்றி பெற்றது. 

இந்நிலையில், தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியது.  எனினும், முந்தைய தேர்தலை விட அதிக தொகுதிகளை இழந்துள்ளது.

ஆனால் சென்ற  மாநகராட்சி தேர்தலில் நான்கே இடங்களை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அதிக அளவாக 48 இடங்களில் வெற்றி பெற்றது.  இது ஆளும் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.  காங்கிரசுக்கு 2 இடங்களே கிடைத்தன.  

இந்த நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் பிரதேச கமிட்டியின் பொருளாளராக உள்ள கூடூர் நாராயண் ரெட்டி அக்கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகினார்.  பொருளாளர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

இதன்பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.  அவருக்கு நட்டா சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை மற்றும் அரசியல்வாதியான விஜயசாந்தியும் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்த நிலையில் உடனே மாநில காங்கிரஸ் பிரமுகரும் இணைந்துள்ளார். தெலங்கானாவில் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது. 

Similar News