கொரோனா மருந்து சுலபமாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை - பிரதமர் மோடி அடுக்கடுக்கான உத்தரவு.!

கொரோனா மருந்து சுலபமாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை - பிரதமர் மோடி அடுக்கடுக்கான உத்தரவு.!

Update: 2020-10-20 10:44 GMT

இந்தியாவில் முன்னெடுக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் முன்னேற்ற நிலையில் இருக்கின்றன. இதில் இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையிலும் உள்ளது. இந்நிலையில் தடுப்பூசியை மக்களுக்கு சீராக விநியோகிப்பது எப்படி, எந்தவித நிர்வாக முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் சுகாதாரம் தொடர்பான உறுப்பினர் , முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில்: கோவிட்-19 –க்கான தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவானது, மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பூசியை சேமித்து வைத்தல் விநியோகம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான விரிவான செயல் திட்டத்தை தயாரித்து வழங்க வேண்டும் என்றார்.

அடுத்து தடுப்பூசி விநியோகித்தல் மற்றும் தடுப்பூசிக்கான முன்னுரிமை ஆகியவற்றுக்காக தீவிரமாக பணியாற்றும் வகையில் மாநில அரசுகளுடன் நிபுணர் குழு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் புவியல் ரீதியான பரப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் போக்குவரத்து, வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சாவடிகளை அமைத்து பொது தேர்தல் நடத்தப்படுவது போல தடுப்பூசி வழங்கும் முறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறி உள்ளார்.

தொடர்ச்சியான குளிர் சேமிப்பு வசதிகள், விநியோக இணைப்புகள், மருந்து குப்பிகள் சிரிஞ்ச்கள் உள்ளிட்ட தேவைப்படும் துணை கருவிகளை தயார் செய்தல் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பேரழிவு மேலாண்மை திட்டம் மற்றும் தேர்தல் நடத்துதல் போன்ற நமது அனுபவங்களை இதில் உபயோகிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் உத்தரவிட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சிகாரணமாக மனநிறைவு கொள்ளக் கூடாது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும்பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக வர இருக்கும் விழாக்காலங்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல் போன்ற கோவிட்டுக்கு ஏற்ற நடத்தைகள், தொடர்ந்து கைகளைக் கழுவதுதல் மற்றும் சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதலை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Similar News