ஆயுத பூஜை : காஷ்மீர் முதல் குமரி வரை பூர்வவீக பண்டிகையாக கொண்டாடுவது எப்படி?

ஆயுத பூஜை : காஷ்மீர் முதல் குமரி வரை பூர்வவீக பண்டிகையாக கொண்டாடுவது எப்படி?

Update: 2020-10-24 14:55 GMT

நம் வாழ்க்கைக்கு உதவும் கருவிகளை சுத்தம் செய்து படையல் செய்து மகிழும் நாள் ஆயுத பூஜை கொண்டாட்டம் : வாழ்க்கைக்கு உதவும் உபகரணங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சிறந்த மனிதப் பண்புகளை கடைபிடிக்கும் நம் ஹிந்து மக்களுக்கு இன்றைய நாளில் வாழ்த்துக்கள் சொல்வோம்.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இரண்டும் ஒரே காலக் கட்டத்தில் கொண்டாடப்பட்டாலும், ஒரே மாதிரியாக கொண்டாடப்பட்டாலும் கொண்டாடுபவர்களின் தொழிலுக்கு ஏற்ப சற்று மாறுபடுகிறது. கல்விமான்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவால் பொருள் சம்பாதித்து வாழ்வார்கள். இவர்களிடம் நூல்களும், பதிவேடுகளும், எழுத்தாணிகளும், எழுதுவதற்கு பயன்படும் பலகைகளும், அளவை உபகரணங்களும் இருக்கும்.

அன்றைய தினம் இந்த பொருள்களையே தங்கள் ஆயுதங்களாகக் கருதி அவற்றை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் அதன் மேல் இட்டு தேவி துர்கா தேவியை ஸரஸ்வதி அவதாரத்தில் அவர் முன்னால் அவற்றை நிறுத்தி பூஜைகள், படையல்கள் செய்து வழிபடுவார்கள். அதேபோல போர் வீரர்களும், மன்னர்களும் ஆயுதக்கூடங்களில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் வெளியேக் கொண்டு வந்து அவற்றை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம், விபூதி என அமர்க்களப்படுத்தி மலர்கள் இடுவர்.

கொண்டாடப்படும் இடங்கள் முழுவதையும் மாவிலைகளால், மலர் தோரணங்களால் அலங்கரிப்பர். பொரியும், பொட்டுக் கடலை குவியல்களும், பலவகையான பழங்களையும் வைத்து படைப்பதுடன் விழா முடிந்து செல்லும்போது மன்னர்கள் வீரர்களுக்கு ஆயுத பூஜை பரிசாக ஒரு பொதி மூட்டை வழங்குவர்.

அதில் ஏராளமான நாட்டு வெல்லத்துடன் சேர்ந்த பொரி கடலை, பழங்கள், இனிப்புகள் இவற்றுடன் பணத்தையும் வைத்து மன்னர்கள் தம் வீரர்களுக்கு தந்து மகிழ்ச்சியடைவர். வீரர்களின் குடும்பம் மற்ற பண்டிகைகளில் அடையாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.

இதேபோல விவசாயிகளும், வர்த்தகர்களும், பட்டறை அதிபர்களும் அவ்வவர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு கொண்டாடினர். இந்த மாபெரும் மகிழ்ச்சி பண்டிகை எப்படி வந்தது என்பது குறித்து ஒரு புராண கால வரலாற்று நம்பிக்கையும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கப்பால் விண்ணுலகையும், மண்ணுலகையும் ஆட்டிப் படைத்து அனைவரையும் கொடுமைப்படுத்தியவன் மகிஷாசுரன். இவனால் அனைத்து தரப்பட்ட மக்களும் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

அவன் தன்னுடைய மரணம் ஒரு பெண்ணின் கையால் தான் நிகழ வேண்டும் என ஏற்கனவே வரம் வாங்கி இருந்தானாம். ஏனெனில் ஒரு பெண் தன் வலிமையால் தன்னை கொல்ல முடியாது, அதனால் தான் சாகா வரம் வாங்கியதாக நினைத்துக் கொண்டான். ஆனால் விருப்பம், அறிவு, வினைத்திறன், ஆக்கல் எனும் சக்திகளாக அதாவது இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்தி இணைந்து துர்க்கை அம்மனாக விரதமிருந்து, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போரிட்டார் அன்னை துர்கா. ஒன்பதாம் நாளான நவமி தினத்தில் மகிஷாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணக்கதை.

அதன் பின் தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழிக்க அன்னை தான் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு பூஜை செய்யும் விதமாகவும், அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக 'விஜயதசமி' என்ற பெயரில் இந்த ஆயுத பூஜையை கொண்டாடினர் என நம் மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழா நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ஹிந்து மக்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் மட்டுமல்ல இப்போது வேறு மதத்தினர் கூட தங்கள் தொழிலகங்களில் இந்த விழாவை கொண்டாடி தொழிலாலர்களுடன் இணைந்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News