5 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்.!

5 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்.!

Update: 2021-02-21 16:35 GMT

மஹாராஷ்டிரா உள்பட மேலும் 4 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு இன்று ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, நேற்று 13,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 1,43,127 பேர் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் இவர்களின் விகிதம் 1.3 சதவீதம் ஆகும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 6,112 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் பாதிப்புகள் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த 7 நாட்களாக கொரோனாவினால், தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாதிப்பு அதிகரிக்கிறது. நேற்று மட்டும் அங்கு 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் பரவல் சங்கிலியை உடைக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். நாட்டின் மொத்த பாதிப்பில் 75.78 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தான் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவினால் யாரும் உயிரிழக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Similar News