கிராமங்களின் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைய முடியும்: மத்திய இணை அமைச்சர் தகவல்!
புதிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய இணை அமைச்சர்.
புதிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் கிராமிய உதய்மி திட்டத்தின் 3-வது கட்டத்தின் கீழ், திறன் பயிற்சி பெற்ற 200 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளூரில் உள்ள வாய்ப்புகளையும் வளங்களையும் கருத்தில் கொண்டு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறினார். இது நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தலைக் குறைத்து உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா என்ற கனவு பழங்குடியினரின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியம் ஆகாது என்று அவர் கூறினார்.
கிராமங்களின் தற்சார்பு மூலமாகவே, தற்சார்பு இந்தியாவை அடைய முடியும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்றும் அதன் அடிப்படையில் அரசு பயணித்து வருவதாகவும் அவர் கூறினார். இதன் பின்னர், மகாத்மா காந்தி தேசிய கூட்டுத் திட்டத்தின் (MGNF), கீழ், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்டில் பணியாற்றும் குழுவினருடன் அவர் கலந்துரையாடியதுடன் திறன் மேம்பாடு குறித்து எடுத்துரைத்தார்.
Input & Image courtesy: News