கேரளாவில் மதபோதகருக்கு சொந்தமான குழுமத்தில் பல நூறு கோடி முறைகேடு.!

கேரளாவில் மதபோதகருக்கு சொந்தமான குழுமத்தில் பல நூறு கோடி முறைகேடு.!

Update: 2020-11-07 06:45 GMT

கேரள மாநிலத்தில் அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள மதபோதகர் ஒருவருக்குச் சொந்தமான குழுமத்தின் பல்வேறு அறக்கட்டளைகளில் நவம்பர் 5-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொண்டு, மத அறக்கட்டளைகளாக 1961-ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் விலக்குப் பெற்று இவை நடத்தப்பட்டு வந்தன. இந்த குழுமத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் வழிபாட்டு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.

கேரள மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 66 இடங்களில் வருமானவரி சோதனைகள் நடைபெற்றன.

இந்த குழுமம் குறித்து கிடைந்த நம்பகமான தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும், சுவிசேஷ நோக்கங்களுக்காகவும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை அறக்கட்டளைகள் பெற்று வந்தன. ஆனால், வரி விலக்குப் பெற்ற இந்த நிதியை கணக்கில் வராத பணப் பரிமாற்றங்களாக சொந்த உபயோகத்துக்காகவும், ரியல் எஸ்டேட் வணிக பரிமாற்றங்களுக்கும், சட்டவிரோத செலவுகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த குழுமத்துக்குச் சொந்தமாக 30 அறக்கட்டளைகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான அறக்கட்டளைகள் வெறுமனே ஆவணமாக மட்டுமே உள்ளன. பணத்தை வேறு வழிகளுக்கு மாற்றுவதற்காகவே இந்த அறக்கட்டளைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

சோதனையின் போது கணக்கில் வராத ரொக்கப்பணம் பல்வேறு ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள், சொத்து விற்பனை பத்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் இருந்து ரூ.3.85 கோடி பறிமுதல் உட்பட கணக்கில் வராத ரூ.6 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News