பிரதி மாதம் ரூ.3,000 வங்கிக் கணக்கிற்கே வரும் - ஊடகங்கள் பிரபலப்படுத்தாத பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!
IMPLEMENTATION OF PRADHAN MANTRI KISAN MANDHAN YOJANA
ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், சிறு, குறு விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 40 வயதுடையவர்கள், தாமாக முன்வந்து, இத்திட்டத்தில் சேரலாம்.
குறிப்பாக, 29 வயதாகும்போது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், மாதம் ரூ.100/- சந்தா செலுத்தலாம். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில், விவசாயிகள் செலுத்தும் அதே தொகையை, அரசும் செலுத்தும்.
இத்திட்டத்தின்படி, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்குட்பட்டு, தகுதிவாய்ந்த சிறு, குறு விவசாயிகள் 60 வயதை எட்டும்போது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,000/- வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
31 ஜனவரி, 2022 வரை, நாடு முழுவதும் மொத்தம் 21 லட்சத்து 86 ஆயிரத்து 918 விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளதாக, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதே போல, தேசிய விவசாயிகள் நலத் திட்டத்தின் கீழ் புதுமைகள் மற்றும் வேளாண் தொழில் முனைதல் மேம்பாட்டுத் திட்டத்தை 2018-19-ம் ஆண்டு வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தொடங்கியது. நிதி உதவி அளிப்பதன் மூலம் புதுமைகள் மற்றும் வேளாண் தொழில் முனைதலை ஊக்குவித்து வழிகாட்டுதல் சூழலியலை வளர்த்தெடுப்பது இதன் நோக்கமாகும்.
இது தவிர, தேசிய வேளாண் புதுமைகள் நிதியின் கீழ் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு ஆதரவு அளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 50 வேளாண் தொழில் வழிகாட்டுதல் மையங்கள் இதுவரை நிறுவப்பட்டுள்ளன.