"நிறுவனத்தின் நன்மதிப்பே உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்" ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் 'அமுல்' எம்.டி. அறிவுரை !
"வர்த்தகத்தின் நோக்கமும், நிறுவனத்தின் நன்மதிப்பும் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்" என ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் 'அமுல்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஆர்.எஸ்.சோதி அறிவுரை வழங்கினார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக பங்கேற்ற திரு.ஆர்.எஸ்.சோதி அவர்கள் பேசுகையில், "எந்த காரணத்திற்காகவும் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்து கொண்டது கிடையாது. அதனால் தான் எங்களின் அமுல் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது.
இப்போது குஜராத் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் எங்கள் வர்த்தக்கத்தை விரிவு செய்து இருக்கிறோம். அமுல் பொருட்களின் மீதான நன்மதிப்பே எங்களின் வளர்ச்சிக்கு அடித்தளம்" என்றார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் திரு.பவன் கோயங்கா பேசுகையில், "நான் எப்போதும் எனக்கான ஆசான்களை உருவாக்கி கொண்டே இருக்கிறேன். நான் தினமும் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
அது தான் என்னை முன்னேற்ற பாதையில் முன்னோக்கி அழைத்து செல்கிறது. தலைமை பொறுப்பிற்கு வரும் போது பணிவுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், துருதிருஷ்டவசமாக, பலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து கொள்கிறார்கள். உண்மையில், எல்லாம் தெரிந்த நபர் என்று யாரும் இங்கு இல்லை. நீங்கள் எத்தகைய உயர் பதவியை அடைந்தாலும் கற்றுக்கொள்ளும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்...
நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும். ஆகவே, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். வர்த்தக துறையில் நீங்கள் நீண்ட காலம் வெற்றிகரமாக செயல் செய்ய வேண்டுமென்றால், தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியம்" என்றார்.