ரூ.18.60 லட்சம் கோடி இலக்கை கடந்த பிரதமரின் முத்ரா திட்டம்! சிறு தொழில் துறையினர் செம்ம ஹேப்பி!
More than 34.42 crore loan accounts amounting to Rs. 18.60 lakh crore opened since launch of Pradhan Mantri Mudra Yojana
பிரதமரின் முத்ரா திட்டம் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் 7-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் வேளையில், "வருமானம் திரட்டும் நடவடிக்கைகளுக்காக இத்திட்டத்தின் கீழ் 34.42 கோடிக்கு மேற்பட்ட கடன் கணக்குகளுக்கு ரூ.18.60 லட்சம் கோடி கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் வாயிலாக, வர்த்தக சூழல் மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிட்ட நிதியமைச்சர், "இந்தத் திட்டம் சிறு தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவியிருப்பதுடன் அடித்தட்டு அளவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவி உள்ளது. 68%க்கும் மேற்பட்ட கடன் கணக்குகள் பெண்களுக்கும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை கடன் உதவி பெறாத உரிய தொழில் முனைவோருக்கு 22% கடன்களும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முத்ரா பயனாளிகள் அனைவருக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கும் அதே வேளையில், கடனுதவி தேவைப்படும் மற்ற நபர்களும் இத்திட்டத்தில் இணைய முன்வருவதோடு, தேச வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ள நிர்மலா சீதாராமன், "இதுவரை வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 51% எஸ்சி , எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பது, பிரதமரின் முத்ரா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டியிருப்பதுடன் 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற பிரதமரின் தாரக மந்திரத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.