போருக்கு தீர்வு அமைதி. இந்தியாவை உதாரணம் காட்டி பேசிய துணை குடியரசுத் தலைவர்..
பன்முக அணுகுமுறையின் மூலம் அமைதியை அடைவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், சிந்தனை, ஆலோசனை, தொடர்பு, இணக்கம், உரையாடல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தைக் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் நடைபெற்ற சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023 நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சமகாலச் சவால்களை பகுப்பாய்வு செய்வதற்கான இந்தச் சிந்தனை மன்றத்தின் கருத்தாக்கத்திற்காக ராணுவத்தைப் பாராட்டினார். தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக்கில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வுகளுக்கு இது மிகவும் பொருத்தமான தளமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மிகச் சிறந்த ஆன்மீக சிந்தனையாளர்களின் 'கர்மபூமி' என்று இந்தியாவைக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், 'இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாகரிக நெறிமுறைகளைக் கொண்டுள்ளது' என்று கூறினார். நாட்டைப் பாதுகாப்பது, ஆயுதங்கள் மற்றும் வேதங்கள் மூலம் அதன் கலாச்சாரத்தை வளர்ப்பது என்ற இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய ஆச்சார்யா சாணக்கியரின் ஞானத்திற்கு ஏற்ப, நமது நவீன சூழலில் இந்த வார்த்தைகளின் நீடித்த பொருத்தத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நெருக்கடிகள் குறித்து பேசிய குடியரசு துணைததலைவர், உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார பரஸ்பர சார்பு இருந்தபோதிலும், மோதல்கள் நீடிப்பதற்கு கவலை தெரிவித்தார். பொருளாதார உபரிகளை கடின சக்தியாக மாற்றும் நாடுகளின் திறன் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மிகவும் பயனுள்ள மோதல் தீர்வுக்கான ராஜீய நடவடிக்கைக்குப் புத்துயிர் அளிக்கவும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய வேண்டிய அவசர அவசியத்தை தன்கர் வலியுறுத்தினார்.
Input & Image courtesy: News