மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சாதனை.. அதிவேக வளர்ச்சி நோக்கிய பயணம்..
2023-24 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் அரசு மின் சந்தைத் தளம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு மொத்த வர்த்தக மதிப்பை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டு முழுவதற்குமான மொத்த வர்த்தக மதிப்பை (GMV) விஞ்சி, நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் மொத்த வர்த்தக மதிப்பு (GMV) ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டி, அரசு மின் சந்தைத் தளம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த முக்கியமான சாதனைக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் கணிசமான பங்களிப்பை செய்துள்ளன. இவற்றின் மதிப்பு 83 சதவீதம் ஆகும்.
மீதமுள்ள 17 சதவீதம் மாநில அரசுகளின் பங்களிப்பாகும். உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி, மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பீகார், அசாம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடப்பு நிதியாண்டில் கணிசமான அளவு கொள்முதல் ஆணை நடைமுறைகளை இந்தத் தளத்தின் மூலம் மேற்கொண்டுள்ளன. சேவைத் துறையில் ஜி.இ.எம்-ன் விரிவாக்கமும் அதன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சேவைகள் பிரிவில் கொள்முதல் ஆணைகள் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. 2021-22 நிதியாண்டில் 23 சதவீதமாக இருந்த சேவைகள் துறை வர்த்தகம், நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜி.இ.எம் தளம் தொடங்கப் பட்டதிலிருந்து ரூ. 5.93 லட்சம் கோடி மொத்த வர்த்தக மதிப்பைத் தாண்டியுள்ளது. ஜி.இ.எம்-மில் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 1.8 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஜிஇஎம் டிஜிட்டல் மாற்றத்துக்கு பலமாக இருப்பதுடன் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் "மேக் இன் இந்தியா" முன்முயற்சியின் மைல்கல்லாகவும் உள்ளது.
Input & Image courtesy: News