எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் பயன்படுத்துங்க.. உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு உத்தரவு!
ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினர் பயத்துடனேயே பொழுதை கழித்து வருகின்றனர். உக்ரைன் எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் தீவிரமான போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கருத்து கூறி வருகிறது. அதே சமயம் எல்லையில் இருந்து ரஷ்யா படைகள் வாபஸ் பெறப்படும் என ரஷ்யா அறிவித்தாலும் அதனை அமெரிக்கா, உக்ரைன் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உக்ரைனில் தொடர்ந்து போர் நிலவும் சூழ்நிலையே தற்போது வரை நீண்டு வருகிறது. இதனால் அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்ததந்த நாடுகளின் தூதரகம் அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் நாட்டில சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு கீவ் நகரில் உள்ள இந்திய தூதரம் சார்பாக அறிவுறுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டில் படித்து வரும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேறுவதற்கு விமானம் இன்றி தவித்து வருவதை மத்திய அரசு உணர்ந்தது. போர் நடைபெறுவதால் மற்ற நாடுகள் உக்ரைனுக்கு விமானத்தை இயக்காமல் வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் இந்தயிர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக மத்திய அரசு தங்களின் பிள்ளைகளை மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் உக்ரைன் இடையில் அதிகமான விமானங்களை இயக்குவது குறித்து விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனிடையே உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர அதிகமான விமானங்களை இயக்க மத்திய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக அனைத்து கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் அனைவரையும் பத்திரமாக மீட்டுவருவதற்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: Tribune India