104 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் ராகுல் சாஹி என்கின்ற 11 வயது சிறுவன் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 80 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது அச்சிறுவன் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மீட்புக்குழுவினருக்கு தகவலும் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளூர் நிர்வாகத்தினர் என்று 500 பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீட்புப் பணியில் ஈடுபடத்துவங்கினர்.
சிறுவன் மூச்சு விடுவதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து 104 மணி நேரத்திற்கு பின்னர் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையை மருத்துவர்கள் அளித்த உடன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதை கண்ட பொதுமக்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்திற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியாலும், ராகுல் சாஹு உயிருடன் மீட்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டார்.
Source, Image Courtesy: Vikatan