ஓசூர் நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம்.. தமிழகம் அழைத்து வரப்படும் கொள்ளை கும்பல்.!

ஓசூர் நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம்.. தமிழகம் அழைத்து வரப்படும் கொள்ளை கும்பல்.!

Update: 2021-01-24 11:32 GMT

ஓசூர், முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போன சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களை நாளை தமிழகம் அழைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று ஒரு கொள்ளை கும்பல் நிதி நிறுவனத்தில் புகுந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் ஐதராபாத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்நது தமிழக போலீசார் ஐதராபாத் சென்று 9 கொள்ளையர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் நாளை ஓசூருக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். கொள்ளையர்களிடம் இருந்து 25 கிலோ நகை மற்றும், பணம், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை கும்பலை பிடித்ததற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News