ஜார்கண்ட் தும்காவில் 144 தடை: மாணவி அங்கிதா இறப்புக்காக தொடரும் போராட்டங்கள்!
பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி இறந்த பிறகு, வெடித்த போராட்டங்கள் காரணமாக தும்காவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு தலை காதலை மறுத்த காரணத்திற்காக ஜார்கண்டில் அமைந்துள்ள தும்கா மாவட்டத்தில், ஷாருக் ஹுசைன் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரியை தீயிட்டு கொளுத்தி உள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக அங்கு போராட்டங்கள் பெருமளவில் வெடிக்க ஆரம்பித்தன.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் மக்கள் கணிசமான அளவில் வீதியில் இறங்கினர். இந்த சம்பவத்தை அடுத்து தும்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. திங்கள் கிழமை இன்று காலை அங்கிதாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிப் பயணத்தைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கணிசமான எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூத்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். "குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவு விசாரணைக்காக விரைவு நீதிமன்றத்தில் விண்ணப்பிப்போம். மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிலைமை கட்டுக்குள் உள்ளது மற்றும் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது" என்று தும்கா காவல்துறை கண்காணிப்பாளர் SP அம்பர் லக்டா கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Input & Image courtesy: OpIndia News