டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் தொடங்கியது:  6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்று உரை.!

டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் தொடங்கியது:  6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்று உரை.!

Update: 2020-11-29 11:57 GMT

சர்வதேச அளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பலம் பொருந்திய அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் சீனாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட அவற்றின் அண்டை நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. 

இதில் இப்போது சீனா, பாகிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளன. என்றாலும் இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த 2017 ஆம் ஆண்டுதான் உறுப்பினர்களாக இணைந்தன. 

இந்நிலையில், உறுப்பு நாடுகளின் வர்த்தக, பொருளாதார செயல்திட்டம் குறித்து விவாதிக்க டெல்லியில் 19வது ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

காணொலி காட்சி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

கடந்த 10ம் தேதி இந்த அமைப்பின் உச்சிமாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News