காஷ்மீரில் அதிரச்செய்யும் ஊழல்.. முன்னாள் நிதியமைச்சர் முதல் அதிகாரிகள் வரை.. திடுக்கிடும் தகவல்கள்.!

காஷ்மீரில் அதிரச்செய்யும் ஊழல்.. முன்னாள் நிதியமைச்சர் முதல் அதிகாரிகள் வரை.. திடுக்கிடும் தகவல்கள்.!

Update: 2020-11-24 14:39 GMT

ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்ட ரோஷ்னி சட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரணையின்போது பல முக்கியத் தலைவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2001ம் ஆண்டில், அப்போதைய முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா அரசு ரோஷ்னி சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு தேவையான நீர் மின் திட்டத்தை கொண்டு வருவதற்கு நிதி திரட்டும் வகையில் அரசு முடிவெடுத்தது.


இந்த திட்டத்தில் ரூ.25,000 கோடி வரை நீர்மின் திட்டங்களுக்கு நிதி தேவைப்பட்டது. அதனை திரட்ட, அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள மக்களுக்கு அரசு நிலங்களின் உரிமையை அப்போதைய சந்தை விலையில் வழங்கும் திட்டமே இந்த ரோஷ்னி சட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் வனப்பகுதி, சமநிலை பகுதி என அரசின் நிலங்கள் அனைத்தும் அதனை ஆக்கிரமித்தவர்களுக்கே மாற்றி அமைக்கப்பட்டது.


இதில் எதிர்பார்த்த தொகை ரூ.25,000 கோடி ஆனால் வந்தது, ரூ.76 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்தது. இந்த விவரங்கள் பின்னாளில் சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சிஏஜி அறிக்கையின் மூலம் திட்டத்தின் முறைகேடு அம்பலமாகியுள்ளது. ஃபரூக் அப்துல்லா அரசோடு இந்த ஊழலானது நின்றுவிடவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் வரை இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 2007ம் ஆண்டில் அந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட்டன. நகர்புற நிலங்கள் வெகுமதி, தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன. மேலும், விவசாய மற்றும் வன நிலங்களை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விதிகள் அனுமதித்தன. அப்போது ஆட்சி நடத்தியது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு.


இதே போன்று முப்தி முகமதி சையத் தலைமையிலான பிடிபி அரசும் இந்த ஊழலில் தொடர்பு வைத்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு ஆளுநர் சத்யபால் மாலிக் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தார். மேலும், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே பலன்கள் கிடைக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டது.


இந்நிலையில், தற்போது ரோஷ்னி சட்டத்தின் கீழ் பயனாளிகளின் பட்டியலை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் மாநில, அமைச்சர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முன்னாள் நிதியமைச்சர் ஹசீப் டிராபு, முன்னாள் உள்துறை அமைச்சர் சஜ்ஜாத் கிச்லு, முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத் வாணி மற்றும் அஸ்லம் கோனி, தேசிய காங்கிரஸ் தலைவர் சயீத்அகூன் மற்றும் முன்னாள் வங்கித் தலைவர் எம்.ஒய்.கான் ஆகியோர் இதில் மிக முக்கியமானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Similar News