நாட்டில் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது.. ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை.!

நாட்டில் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது.. ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை.!

Update: 2020-11-20 08:02 GMT

இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே கடும் எச்சரிக்கையாக கூறியுள்ளார்.


ஜம்மு பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நக்ரோட்டா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆப்பிள் ஏற்றிச் சென்ற லாரியை சோதனையிட முயற்சி செய்தபோது, அதில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.


அந்த லாரியில் இருந்து ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடிய நிலையில், தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை லாரி மீது வீசி வெடிக்க வைத்தனர். இதனால் உஷாரான பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய ராணுவ தளபதி நராவனே, பாதுகாப்புப் படையினர் திறம்பட பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் இந்தச் சம்பவம் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.


மேலும் அவர் இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் என்றும் குறிப்பிட்டார். இனிமேல் பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் காலடி எடுத்து வைக்கவே பயப்படும் நிலை உருவாகும் என்பதில் ஆச்சரியமில்லை.

Similar News