சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை.!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை.!

Update: 2020-12-06 14:06 GMT

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். 

மும்பை சைத்யபூமியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  டாக்டர் அம்பேத்கர் குறித்த நினைவுகளை அவரது புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். 

தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். 

தன் வாழ்நாள் முழுவதையும் தலித் சமுதாயம் மட்டுமல்லாமல் நலிந்த, ஒடுக்கப்பட்ட பிற சமுதாயங்களும் உயர்வு பெற அரசியல் சட்ட அமைப்பில் வழி ஏற்படுத்தியவர். டாக்டர் அம்பேத்கர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பின் 1990-ல் வழங்கப்பட்டது.

சுதந்திரம் பெற்ற பின்பு நமது நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பி அவர் அளித்த அரசியல் சட்ட திட்டங்கள் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஒரு அதிகாரப்பகிர்வை அளித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு சலுகைகள் அம்பேத்கர் பெயர் நினைவிருக்கும் வரை தொடரும் என ஏற்கனவே நமது பாரத பிரதமர் அவர்களும் உறுதி கூறியிருந்தார்.   இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமன்றி, இதர பிற்படுத்தப்பட்ட, நலிந்த பிரிவினரும் கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.

சாதாரண பிரிவை சேர்ந்த மக்களும் அரசியல் மூலமாக பதவியையும் அந்தஸ்தையும் பெற சட்டத்தின் மூலம் வழி ஏற்படுத்திய அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமன்றி, அனைவருக்கும் பொதுவானவர் ஆவார். அவரை இழந்தது நமக்கு மிகப்பெரிய இழப்பாகும் இந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் பெருமையடைவோம்.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரை நினைவுகூர்ந்து டுவிட்டர்  வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார்.

‘டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் மக்களுக்கு தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News